தூங்காநகரம் – மதுரையின் சிறப்புகள்
தொன்மையான நகரம்:
தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்பன மதுரையின் வேறு பல பெயர்களாகும். இந்திய துணைகண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண்ட நகரமாகும். பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது. இந்த நகரில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக இந்த நகரம் அதிகம் அறியப்படுகிறது.
சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்த விசயன் என்ற மன்னன் தன்னுடைய பட்டத்தரசியாக மதுராபுரி (மதுரை) இளவரசியை மணந்ததாக இலங்கையின் பண்டைய வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன.
பாண்டிய நாடு
பாண்டிய நாட்டின் பழைமையான தலைநகரமாக விளங்கிய மதுரை, இன்றைய தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. தமிழ் என்றால் மதுரை; மதுரை என்றால் தமிழ். இங்ஙனம், இவை இரண்டும் பிரிக்க இயலாதவை. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லாரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்தனர். தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு போற்றியது. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், தாம் பாடிய சிறுபாணாற்றுப்படையில்,’தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை’ என்று குறித்தார்.
மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆனையிட்டார். பாம்பு வாலை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்றுமுதல், மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை(விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும். மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
No comments:
Post a Comment