‘கூத்துக் கலை அன்றும் இன்றும்'
–
- தமிழர்களின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் கலைகளில் கூத்தும் ஒன்றாக விளங்குகிறது. நெஞ்சை அள்ளும் நிகழ்த்து கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்று, கூத்துக்கலை இசைக்கலையைப் போலவே பழமை வாய்ந்தது என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழ் முத்தமிழ் என வழங்கப்படுகின்றது இயல், இசை, கூத்து என்பன முத்தமிழின் கூறுகள், வரி வடிவத்தில் இதயத்துக்கு இன்பம் பயப்பது ‘இயல்’ என்றும் ஒலி நயத்துடன் பாடப்பெறும் பொழுது இசையுடன் இயைந்தது ‘இசை’ என்றும் மெய்பாடுகளினால் வெளிப்படுத்தப்படுவது ‘கூத்து’ என்றும் வழங்கப்படுகிறது. ஆடற்கலையும் நடிப்புக்கலையும் ஒருங்கே வளர்ந்தவை ‘பாவ, ராக, தாள’ வகை கொண்டு பதத்தால் பாட்டுக்கு இயைய நடிப்பது கூத்து என்று அபிதான சிந்தாமணி விளக்குகிறது. கூத்து என்பதை முதன்முதலில் ‘நாடகம்’ என குறிப்பிட்டவர் இளங்கோவடிகள், இத்தகைய சிறப்பும் பழமையும் வாய்ந்த கூத்துக் கலையின் அக்கால நிலையையும் இக்கால நிலையையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கூத்து – விளக்கம்
- “கூத்து” என்னும் சொல் “நாட்டியம்”, “நாடகம்” ஆகிய இரு கலைகளுக்கும் பொதுவானதாக வழங்கப் பெற்றுள்ளது. தொல்காப்பியத்தில் “கூத்து”, “கூத்தர்” என்னும் சொற்கள் உள்ளன. சங்க இலக்கியங்களிலும் “கூத்து” என்னும் சொல் மிகுதியாக உள்ளது. “கூத்தர் ஆடுகளம் கடுக்கும்” (புறம் 28) “இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து” (சிலம்பு 3:12) “நாட்டியம் நன்னூல் நன்கு கடைப்பிடித்து” (சிலம்பு 3:46) “நாடகமேத்தும் நாடகக் கணிகை” (சிலம்பு, பதிகம் 15) “கூத்தாட்டு அவைக்கறம்” (திருக்.332) என்று சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. வேடம் புனைந்து இரவு தொடங்கி விடியும் வரை கதை தழுவி ஆடப்படும் நாடகமே கூத்து ஆகும். கூத்து எனும் சொல் முதலில் நடனத்தையும் பின்னர் கதை தழுவி வரும் நாடகத்தையும் குறித்தது. கூத்து நடத்தப்பட்ட களத்தை ஒட்டியே அவை தெருக்கூத்து எனப் பெயர்பெற்றது.
கூத்து வகைகள்
- கூத்து என்பது பல்வேறு ஆடல்களைக் குறிக்கும் சொல்லாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கூத்துகள் ஏழுவகை என்பர். இவற்றிற்கு முரணான கூத்துகளும் உள்ளன.
1. வசைக்கூத்து ஜ் புகழ்க்கூத்து
2. வேத்தியல் ஜ் பொதுவியல்
3. வரிக்கூத்து ஜ் வரிச்சாந்திக்கூத்து
4. சாந்திக்கூத்து ஜ் விநோதக்கூத்து
5. தமிழ் ஜ் ஆரியம்
6. இயல்புக்கூத்து ஜ் தேசிக்கூத்து
7. வெறியாட்டு
இவைகளில் முதல் ஆறும் இரண்டு வகைகளாக இணைந்து விளங்கும். வசைக்கூத்து என்பது ஒருவரை வசைப்படுத்திக் கூறுதலாகும். இதற்கு முரண்பட்டதாக ஒருவரை ஏற்றிப் பாடுதல் புகழ்க் கூத்தாக அமையும். வேந்தன் முன்னால் ஆடிக் காட்டும் கூத்து வேத்தியல் என்றும் பொதுமக்கள் முன்னர் ஆடிக்காட்டும் கூத்து பொதுவியல் என்றும் அழைக்கப்பட்டன. தலைவனுடைய சாந்த குணங்களைப் பாடுவது வரிக்கூத்து எனவும், தலைவனுடைய சாந்த குணங்களை மாற்றிப் பாடுவது வரிச்சாந்திக் கூத்து எனவும் அழைக்கப்படுகின்றன. தலைவன் இன்பமாக நின்றாடியது சாந்திக்கூத்து என்றும், இதற்கு முரண்பட்டநிலையில் நின்றாடுவது விநோதக் கூத்து என்றும் அழைக்கப்பட்டன. ஆரிய நாட்டினர் வந்து ஆடிக் காட்டும் கூத்து ஆரியக் கூத்து என்றும், தமிழ்நாட்டவரின் கூத்து தமிழ்க்கூத்து எனவும் கூறப்பட்டன. இயல்பாக ஆடும் ஆடலை இயல்புக் கூத்து என்றும் தன் தேசத்திற்கு உரியவைகளை ஆடிக் காட்டுவதனைத் தேசிக் கூத்து என்றும் குறிப்பிட்டனர். தெய்வமேறி ஆடும் ஆடலை வெறியாட்டு என்றனர்.
பண்டைத் தமிழகத்தில் பதினொரு வகையான ஆடல்கள் சிறப்புற்று விளங்கின. சிலப்பதிகாரம் பதினொரு வகை ஆடல்களைக் குறிப்பிடுகிறது. இவைகளை மாதவி இந்திரவிழாவில் பொது மக்களுக்காக (பொதுவியல்) ஆடிக்காட்டினாள். இப்பதினொரு ஆடல்களும் பின்வருமாறு அமைந்தன. அவை, கொடுகொட்டி, பாண்டரங்கம், அல்லியம், மல்லாடல், துடிக்கூத்து, குடையாடல், குடம், மரக்கால் ஆடல், பேடியாடல், பாவையாடல், கடையம் என்பனவாகும்.