Thursday, 18 January 2018

சீவகசிந்தாமணி


முன்னுரை

“சீவகன் காவியத் தலைவன்; அவனைச் சிந்தா மணியே’ என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் வழங்குகிறது.

இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆவார். அவர் ஒரு சமணத் துறவி என்று அவருக்கு முத்திரை குத்தப்பட்டி ருக்கிறது. இந்தக் காவியத்தைப் பொருத்தவரை அவர் இளங்கோவடிகள் போல ஒரு மாபெருங் கவிஞர் எனவே கொள்ள வேண்டி இருக்கிறது. அவர் துறவு பற்றிக் கூறுவதால் அவரைத் துறவி என்று கூறிவிட்டனர் என்று தோன்றுகிறது.

இந்த நூல் கம்பராமாயணத்துக்கும், பெரிய புராணத்துக்கும் முன்பு தோன்றியது. வைணவ ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் கடல் மடை திறந்தது போன்று பாமாலைகள் பாடிவிட்டுச் சென்று இருக்கின்றார்கள்.

அவர்களுக்குப் பின் தோன்றிய மதிக்கத்தக்க நூல்களுள் இது தலையாயது ஆகும்.

கல்வியில் பெரியவர் கம்பர் என்று கூறுவர்; காவியத்தில் திருத்தக்கர் முன்னோடி என்று கூற வேண்டி யுள்ளது. கம்பருக்கும் இவர் முன் மாதிரியாக விளங்கி யுள்ளார். இதன் தனிச் சிறப்பு ஏற்கனவே வழங்கி வந்த கதையை இவர் தன் கவிதையாற்றலால் அழகுபடுத்தி யுள்ளமை, சங்க இலக்கியப் பாடல்கள் அவற்றின் உவமை மரபுகள் வருணனைகள் இதில் மிகுதியும் இடம் பெற்றுள்ளன.

எனவே சீவக சிந்தாமணி பழந்தமிழ் இலக்கிய மரபுகளைக் காத்துத்தரும் ஒரு பெட்டகம் என்று கூறலாம். காலத்தில் முற்பட்டது என்பதால் மொழி நடை சற்றுப் பொருள் உணர அரியதாக இருக்கிறது. நச்சினார்க்கினியர் விளக்கவுரை தந்துள்ளார்.

நச்சினார்க்கினியர் தரும் செய்திகள் மிகவும் அரியன. பத்துப்பாட்டுக்கு உரை எழுதிய இப்பேராசிரியர் இதற்கும் உரை தந்திருப்பது பல அரிய வழக்குகளை அறிய உதவுகிறது.

இதனை உரைப்படுத்தி இதன் கதையை மற்றவர்களும் அறியச் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொண்ட முயற்சியே இது.

கதை சுவை மிக்கது; வீரகாவியம், இதில் கூறப்படும் நீதிக் கருத்துக்கள் அருமையானவை; வாழ்க்கைக்குப் பயன் படுபவை: பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், திருக்குறள் தரும் நீதிகளை இந்நூல் ஆங்காங்குத் தருகின்றது. அவற்றில் இல்லாத நீதிக் கருத்துகளும் புதுமையாக இதில் தரப்படுகின்றன.

எனவே இது உரைநடையாக்கம் செய்வதால் தமிழ்ப் புதையலை வெளிக் கொணரும் பணி செய்ததாக ஒரு மன நிறைவு ஏற்படுகிறது.

இதனை நேர் கவி பெயர்ப்பாக எழுதினால் அது பொழிப்புரையாகுமே அன்றி உரை நடையாக்கம் ஆகாது. எனவே இதன் உள்ளடக்கமும் செய்திகளும் சிதையாமல் அதற்கு வடிவம் தரவேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் இதை நேர் கவிபெயர்ப்பாக அமைக்காமல் இக்காலப் போக்கிற்கு இயையச் சுவையும் அழகும் நயமும் மிக்க உரை நடை வடிவம் தரப்பட்டுள்ளது.

மூல நூலினின்று இது அடிப்படையில் மாறுபட வில்லை; மாற்றும் உரிமையை எடுத்துக் கொள்ளவில்லை; அதன் உள்ளடக்கம் சிறிதும் வழுவாமல் புதிய வடிவம் தந்திருக்கிறேன்; அவ்வளவுதான்.

கதையின் இயக்கத்திற்குச் சில கூட்டல் கழித்தல்கள் தேவையாயின. முன்பின் இணைத்துக் கூற வேண்டுவதாக ஆயிற்று.

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய உரைநடைத் தமிழ் வேறு: அக்காலத் தமிழ் வேறு; ஆயிரம் ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு திருத்தக்கதேவர் சொல்நடையை இன்று எடுத்து எழுத இயலாது. உவமைகளும் ஒரு சில புதிது தேவைப்பட்டன. அந்த வகையில் மூல நூலினின்று சற்று வேறுபடுகிறது.

இது சமண நூல் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டது. எந்தச் சமயமும் மனித தர்மத்தையே கூறுகிறது. அதைக் கூறும் முதல் மனிதன் வழிபடும் கடவுள் ஆகிவிடு கிறார். அவர் பெயரில் இக்கருத்துகளுக்கு ஒரு சமய நெறி என்ற முத்திரை தரப்படுகிறது. அதன் கருத்துக்கள் கொள்கைகள் மானிட சமுதாயம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இருப்பதால் அவற்றை வேறு புதிய போக்கில் விளக்க வேண்டியது ஆயிற்று.

காலத்துக்கேற்ற வகையில் அறிவுக்கு ஏற்கக் கூடிய வகையில் அவை இங்குக் கூறப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துக் கூறப் புதிய உத்திமுறைகள் கையாளப்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே பாரதம் இராமாயணம் இவற்றை உரை நடையாக்கம் செய்திருக்கிறேன். அவை மூல நூலினின்று எந்த வகையிலும் மாற்றம் பெறாத வகையில் அடியொற்றி எழுதப்பட்டன. இதனை அவ்வாறு எழுத முடியவில்லை. இதில் இருக்கின்ற இன்பச்சுவைப் பாடல்கள் மூலநூலில் உள்ள வடிவத்தில் படிப்பதுதான் தகும்; உரை நடையாக்கம் செய்தால் இழிசுவையாக அமையும்.

இதுவரையில் யாரும் இதன் கதையை உரைநடையில் தர முன்வரவில்லை; அந்தக் குறையை இது நிறைவு செய்கிறது; அவ்வகையில் இது ஓர் உரைநடைக் காவியமாகத் திகழ்கிறது.

No comments:

Post a Comment