Tuesday, 9 January 2018

muththollayiram

முத்தொள்ளாயிரம்

     இந்நூல் அகமும் புறமும் பற்றிய பாடல்களைக் கொண்டதாகும். மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிய தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் இயற்றப்பட்டன. அதனால் இது முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது. இவற்றில் தற்சமயம் கிடைக்கப்பெற்றவை 109 பாடல்கள் மட்டுமே. அவை கடவுள் வாழ்த்து - 1, சேரனை குறிக்கும் பாடல்கள் - 22, சோழனைக் குறிக்கும் பாடல்கள் - 29, பாண்டியனைக் குறிக்கும் பாடல்கள் - 57 ஆகும். இப்பாடல்களை இயற்றிய புலவர்களின் பெயர்களும் காலமும் அறியப்படவில்லை.

கடவுள்வாழ்த்து

மன்னிய நாள்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்றயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு! 1

சேரன்

தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே-ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு. 2

வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேற் கண்டவர்
மாமையே அன்றோ இழப்பது-மாமையின்
பன்னூறு கோடி பழுதோ என் மேனியில்
பொன்னூறி யன்ன பசப்பு. 3

கடல்தானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை-அடைக்குமேல்
ஆயிழையாய்! என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான். 4

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேல் மாந்தைக் கோவே!-நிரை வளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்
செங்கோலன் அல்லன் என. 5

புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரும் நல்நாடன்-என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவரறிந்த வாறு. 6

கடும்பனித் திங்கள்தன் கைபோர்வை யாக
நெடுங்கடை நின்றதுகொல் தோழி!-நெடுஞ்சினவேல்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையை
காணிய சென்றவென் நெஞ்சு. 7

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன்-நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு. 8

வருக குடநாடன் வஞ்சிக்கோ மான் என்று
அருகலர் எல்லாம் அறிய-ஒருகலாம்
உண்டா யிருக்கஅவ் ஒண்தொடியாள் மற்றவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம். 9

No comments:

Post a Comment